சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதில் குழந்தைக்கு தீவிர (hydrocephalus) எனும் மூளையில் நீர் கசியும் நோய் இருந்தது. குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் இருந்தது. பாக்டீரியா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.