சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி பூங்கா, 700 வகையான தாவரங்கள், பல அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி உள்ளது.
தோட்டக் கலைத்துறையில் இருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் இக்காட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியில் பூக்களால் செய்யப்பட்ட முதலை, யானை, பட்டாம் பூச்சி, தொடர்வண்டி, அன்னபறவை, மிக்கி மவுஸ், படகு, கார் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமை செயலாளர் முருகானந்தம், தோட்டக்கலைத்துறை செயலாளர் செல்வி அபூர்வா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.