தமிழகத்தில் சமீப காலமாக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல பல்வேறு பள்ளிகளுக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள், பேருந்து நிலையம் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து தமிழக மற்றும் சென்னை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மிரட்டல் விடுத்த நபர் குறித்த தகவல்களை கண்டுபிடிப்பது காவல் துறைக்கு சவாலாக இருந்தது வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பிஎஸ்எஸ்பி மில்லினியம் பள்ளிக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
உடனே பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், புனித தோமையார் மலை போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர் போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மெயில் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது, தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் மகள் பெயரில் (daudee_ jiwal@mail2tor.com) போலியான மெயிலை உருவாக்கி மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தமிழக காவல்துறை உயர் அதிகாரி மகள் மெயில் போல போலி ஐ.டியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.