Skip to content
Home » சிறுமியை முட்டிய மாடு….. பதைபதைக்கும் வீடியோ….

சிறுமியை முட்டிய மாடு….. பதைபதைக்கும் வீடியோ….

  • by Authour

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று மாலை பள்ளி முடிந்து தாயுடன்  வந்த  சிறுமியை மாடு முட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாடு வன விலங்கு போல நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், தாய் ஒருவர் பள்ளியிலிருந்து தனது மகளையும், மகனையும் அழைத்து வருகிறார். தாயின் இடது புறம் சிறுமி நடந்து வருகிறார். அப்போது அவர்களுக்கு முன்னால் சென்ற மாடு ஒன்று திடீரென திரும்பிவந்து அந்தச் சிறுமியை கொம்பால் முட்டித் தூக்கி எறிகிறது. பின்னர் விடாமல் அந்தச் சிறுமியை தாக்குகிறது. அந்த மாட்டுடன் இருக்கும் சற்றே வளர்ந்த கன்று ஒன்றும் இணைந்து கொள்கிறது. சிறுமியின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் குவிகின்றனர். ஆளுக்கொரு கல்லாக எடுத்து வீச மாடு அசராமல் சிறுமியை தாக்குகிறது.

ஒரு நொடிப் பொழுது மாட்டின் கவனம் சிதற இளைஞர் ஒருவர் சிறுமியை சற்று தூரம் இழுத்து வருகிறார். ஆனால் மீண்டும் மாடு சிறுமியை தன்வசம் இழுத்து தாக்குகிறது. ஒரு நிமிடம் வரை இந்தப் போராட்டம்

நீடிக்கிறது. அப்போது ஒரு தடியுடன் பின்னால் இருந்து ஓடிவரும் நபர் மாட்டை அடித்துத் துரத்துகிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்கின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் காண்போரை பதற வைக்கிறது. மாடு தானே என்று நாம் எல்லோரும் கடந்து செல்லும் நிலையில் இந்தச் சம்பவம் மாட்டைக் கண்டாலே அஞ்ச வைப்பதுபோல் அமைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

காயமடைந்த அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தற்போது அவர் மருத்துவமனையில் நலமுடன் உள்ளார்.  அவருக்கு  தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 2 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் முதுநிலை கால்நடை மருத்துவர்) கூறியதாவது:

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் காயமடைந்தார். அந்தச் சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் வேதனையானது தான். நகர்ப்புற வாழ்விடப் பகுதிகளில் மாடுகள் வளர்க்க அனுமதியில்லை. ஆனால் அது எங்களின் வாழ்வாதாரம் என்று கூறி சிலர் மாடு வளர்க்கின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு மாடு வளர்க்க 36 சதுர அடி கார்பெட் ஏரியா இருக்க வேண்டும். அதற்குள் தான் அவர்கள் மாட்டை கட்டி வளர்க்க வேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. மீறினால் அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றுவார்கள். இதுதான் இப்போதைக்கு அமலில் இருக்கும் சட்டமாக உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி மாடுகளை நாங்கள் கைப்பற்றி வந்தாலும் ஓரிரு நாட்களில் ரூ.2000 அபராதம் செலுத்திவிட்டு மாட்டை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். எனவே நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை. சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த சம்பவத்தைப் பொருத்தவரை சிறுமியை முட்டித்தள்ளிய மாட்டைக் கைப்பற்றியுள்ளோம். மாடு கண்காணிப்பில் இருக்கிறது. ஒருவேளை அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் நலச் சங்கம் மாட்டு உரிமையாளருக்கு ஆதரவாக வந்தாலும்கூட இந்தச் சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும்”

மாநகராட்சி ஆணையர் என்பதைத் தாண்டி ஒரு கால்நடை மருத்துவராகச் சொல்கிறேன், மாடுகளை வளர்ப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாடுகளுக்கு நோய் இருக்கிறதா என்பதை முறையாக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் இத்தனை ஆக்ரோஷமாக தாக்கிய மாட்டுக்கு வெறிநோய் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்வாதாரத்துக்காக மாடுகளை வளர்க்கும்போது அதன் பாலைக் கறந்து சொசைட்டியில் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கு நோய் இருந்தால் அது பால் மூலம் பரவாமல் இருக்கத்தான் அது பால் பண்ணைகளில் ஃபாஸ்சரைஸிங் எனப்படும் சுத்திகரிப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே பொறுப்புடன் இருங்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *