சென்னை மாநகராட்சி பகுதியில், டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்துவதால் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என தெரு நாய்கள் பயமுறுத்தாதவர்கள் யாருமே இல்லை.
அதாவது, குறிபிட்ட நாய் , எந்த மண்டலத்தை சேர்ந்தது, கருத்தடை செய்யப்பட்டதா..? நாய்களுக்கு எதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவற்றிற்கு மருத்துவம் பார்க்க என சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் கருவிகள் தெருநாய்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்களை டிஜிட்டல் கருவிகள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது. நாயின் கழுத்தின் கீழ் மைக்ரோசிப்கள் பொருத்தப்பட்ட க்யூஆர் குறியீடுகள் கொண்ட காலர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த க்யூஆர் குறியீட்டில் வயது, நிறம், தடுப்பூசி நிலை, கருத்தடை வரலாறு மற்றும் அசல் இடம் போன்ற விவரங்கள் இருக்கும். நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி ஊழியர்கள் நாயை பிடிக்கும்போது, புவிசார் ஒருங்கிணைப்புகளுடன் கூடிய புகைப்படத்தைப் பதிவேற்றுவார்கள். இந்தத் தரவு பயன்பாட்டில் சேமிக்கப்பட்டு, நாயின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள மைக்ரோசிப்புடன் இணைக்கப்படும். வெவ்வேறு சுற்றுப்புறங்களுக்கு நாய்களை இடமாற்றம் செய்வதைத் தடுக்க தெருநாய்களின் டிஜிட்டல் சுயவிவரங்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள். முதற்கட்டமாக 3,500 காலர்களை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு நாய்கள் தெரியும் வகையில் காலர்களில் வெளிச்சம் தெரியும் வகையில் உள்ளது.