Skip to content
Home » மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

  • by Senthil

 தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, அண்மையில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN-Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.

மேலும் “வடகிழக்கு பருவமழையால் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.அதற்கு தேவையான நீர் இறைக்கும் இயந்திரம், மர அறுப்பான்கள், JCB,படகுகள் போன்ற கருவிகளை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் முன்கூட்டியே சென்று நிறுத்த வேண்டும்.பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும்,”என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன.

இந்தப் படகுகள் மண்டலம் வாரியாக நிறுத்தப்பட்டு, வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு ஒரு படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!