நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் தேர்தல் துறை சார்ந்த அரசாணை கடந்த 12.04.2023 அன்று வெளியானது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய காங்., கவுன்சிலர் சிவ ராஜசேகரன் நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தத்தினால், சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. வார்டுகளில் திட்டங்கள் செயலாக்கத்தின் நிதி உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு மாமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஆணையரே பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கும் திருத்தங்களும், 4 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு மட்டும் மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம் போன்ற திட்டங்கள் செயலாக்கத்திற்கான நிதி வரம்புகள் போன்ற சட்ட விதிகள் திருத்தத்தினால் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிபோவதுடன் கேள்விக்குள்ளாகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துகளை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.மேலும் சட்டவிதிகள் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என மாமன்றத்தில் கோஷம் எழுப்பினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் மற்றும் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மேயர் பிரியா உறுதி அளித்தார்.
