மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் குடியிருப்புகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் இரவுபகல் பாராமல் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சேலையூர், முடிச்சூர், அனகாபுத்தூர் பகுதிகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மக்களுக்கு உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். பல இடங்களில் வெள்ள நீர் வடியாத நிலையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.