Skip to content

சென்னை பள்ளியில் சொற்பொழிவு.. 2 எச்.எம் டிரான்ஸ்பர்..

  • by Authour

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு, மாணவ, மாணவிகளிடையே, சொற்பொழிவாற்றினார். அப்போது, மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கச் செய்ததை அடுத்து, அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். அந்த சமயம் மகா விஷ்ணுவின் பேச்சுக்கும், செயலுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளியில் அனாவசியமாக மறுபிறவி, பாவம், புண்ணியம் என்று எல்லாம் எதற்காக பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனால், கோபமடைந்த மகா விஷ்ணு, ‘நீங்கள் சொல்லித் தராததைத் தான் நான் சொல்லித் தருகிறேன். அதுக்கு நீங்கள் எனக்கு நன்றி கூற வேண்டும். வீணாக, வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சை வெடித்தது. ஆன்மிக சொற்பொழிவாளர்களை அரசுப் பள்ளிகளுக்கு எதற்காக அனுமதிக்கிறீர்கள்? என்றெல்லாம் பள்ளிக்கல்வித்துறை மீது கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மகேஸ் ‘என் துறையின் கீழ் இருக்கும் ஆசிரியர்களை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். இவர் மீது ஆசிரியர் புகார் அளித்தால், அதற்கு உறுதுணையாக இருப்போம். பிற்போக்கு பேச்சை தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது, என நிருபர்களிடம் கூறினார்.

இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டார். அதேவேளையில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை போலீஸில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மேலும், திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் மகா விஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகா விஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!