Skip to content
Home » சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான பிரான்சிஸ் டே, தனது மேலதிகாரியான ஆண்ட்ரூ கோகனுடன் சேர்ந்து, விஜயநகரப் பேரரசுடன் இன்றைய சென்னையாக இருக்கும் நிலத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தார், அது மெட்ராஸாக மாறியது, இன்று தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை என்று அழைக்கப்படுகிறது.

மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் வர்த்தக மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக வாங்கிய நிலம் சென்னை பட்டணம் என்று கையெழுத்தானது.

384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணமாக இருந்து தற்போது நாட்டின் மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி உள்ளது சென்னை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே குடியிருப்புகள் வளர்ந்தன. பின்னர் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. பின்னர், பழைய மற்றும் புதிய நகரங்கள் இணைக்கப்பட்டன. இது தற்போது நாட்டின் முக்கியமான பெருநகராக மாறி உள்ளது.

இன்று பல்வேறு காரணங்களால் சென்னை உயர்ந்து நிற்கிறது. கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சுற்றுலா, வாகனத் தொழில்கள், திரைப்படங்கள் போன்றவற்றில்  சென்னை முன்னணி நகராக உள்ளது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தற்போது தமிழ்நாட்டின் தலைமை செயலகமாக விளங்குகிறது.

சென்னை உயர்நீதிமன்றம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி மருத்துவமனை, விக்டோரியா மஹால், ரிப்பன் மாளிகை, ராஜாஜி அரங்கம் என சென்னையின் அடையாளங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவின் மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை, டைடல் ஐடி பார்க், நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முனையமான கோயம்பேடு பேருந்து நிலையம், பிரபலமான வழிபாட்டு தலங்கள், கன்னிமாரா நூலகம், கலங்கரை விளக்கம் என சென்னைக்கென தனி அடையாளங்கள் உள்ளன.

சென்னை மாநகரின் தோற்றம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. முதல் மெட்ராஸ் தினம் 2004 ல் கொண்டாடப்பட்டது, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் 2004 ல் ஐந்து நிகழ்வுகளுடன் தொடங்கிய இந்த கொண்டாட்டம் 2007 ல் 60 நிகழ்வுகளுக்கு மேல் படிப்படியாக வளர்ந்தது.

ஒவ்வொரு ஆண்டும், மெட்ராஸ் வாரம் மற்றும் மெட்ராஸ் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்று மக்கள் கோருவதால், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் ஆவணப் புகைப்படங்களின் கண்காட்சியையும் முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் பற்றிய புகைப்படம் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!