மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையை வெள்ள நீர் சூழந்தது. இதனால் சென்னை தனித்தீவாக காட்சியளித்து. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில், மழைக்கால தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் அவதிப்படுவர்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.