ரூம் போட்டு யோசிப்போங்களோ……. அப்படின்னு வடிவேலு ஒரு வசனம் பேசுவார். மோசடி பேர்வழிகள் அப்படித்தான் ரூம் போட்டு யோசிக்கிறாங்க போல. அப்படி யோசித்து…..திருச்சி வாலிபரிடம் ரூ.1 லட்சத்தை ஆட்டைய போட நினைத்துள்ளார். 2 மணி நேரம் போனில்……. போலீஸ்……. மும்பை போலீஸ்….என உருட்டல், மிரட்டல் வித்தைகள் காட்டியும், கடைசியில் அந்த மோசடி பேர்வழியால் பணம் பறிக்க முடியவில்லை.
ஆபத்பாந்தவனாக வந்த வாலிபரின் நண்பரால் பணம் தப்பியது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
திருச்சி மாநகரின் மைய பகுதியாம் கருமண்டபத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் டெலிபோன் இலாகாவில் இருந்து பேசுவதாக கூறி பேச்சை தொடர்ந்தார்.
அவர், கருமண்டபம் வாலிபர் மீது மும்பை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மும்பை தொழில் அதிபரிடம் நீங்கள் பல கோடி மோசடி செய்திருக்கிறீர்கள். உங்களை கைது செய்ய மும்பை போலீஸ் வந்து கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக மேலும் விவரங்களை சொல்கிறேன். நீங்கள் உடனடியாக உங்கள் வீட்டுக்கு சென்று தனி அறையில் அமர்ந்து கொண்டு அந்த அறையை பூட்டிக்கொள்ளுங்கள் என்றார்.
அதன்படி அந்த வாலிபர் வீட்டுக்கு வந்து ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு போனில் பேச்சை
தொடர்ந்தார். அப்போது வீடியோ கால் வந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரி தோன்றினார். அவருக்கு பின்னால் மும்பை போலீஸ் என ஆங்கில எழுத்துக்களும் இருந்தது. வயர்லஸ் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
உங்கள் ஆதார்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுங்கள் என அந்த அதிகாரி மிரட்டினார். உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என நான் சொல்கிறேன் என அவரது பெயரில் ஒரு வங்கி கணக்கை காட்டினார். அந்த கணக்கை இந்த வாலிபர் தொடங்கவே இல்லை. ஆனால் அவா் பெயரில் ஒரு வங்கி கணக்கை காட்டிய அந்த அதிகாரி, உங்கள் கணக்கில் இருந்து நான் சொல்லும் கணக்குக்கு ரூ.1 லட்சத்தை உடனே அனுப்புங்கள் என்றார்.‘
அந்த வாலிபரும் பணத்தை அனுப்ப முயன்றபோது இன்னொரு கால் வந்தது. அதில் வாலிபரின் .. நண்பர் பேசி உள்ளார். நண்பரிடம் நடந்த சம்பவத்தை சொல்லி அந்த வாலிபர் அழுததால் நண்பர் உடனடியாக வீட்டுக்கு சென்று இது பணம் பறிக்கும் மோசடி ஆசாமிகளின் வேலை. எனவே பணத்தை அனுப்பாதே , வா போலீசுக்கு சென்று புகார் செய்வோம் என கூறி உள்ளார். அதற்கு அவர் போலீசுக்கு வேண்டாம் என கூறி விட்டார்.
நண்பர் சரியான நேரத்தில் போன் செய்ததால் கருமண்டபம் வாலிபரின் ரூ.1 லட்சம் பணம் தப்பியது. இதுேபோன்று யார் , யார் கணக்கில் பணம் இருக்கிறதோ அவர்களின் கணக்கை தெரிந்து கொண்டு மோசடி நபர்கள் இப்படி பணம் பறிப்பு வேலையில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என அந்த நண்பர் அறிவுரை வழங்கினார்.