பெங்களூருவுக்கு வேலை மற்றும் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 25). இவர் பெங்களூருவில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதே அறையில் அவருடன் சில பேர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு சீனிவாஸ் சாப்பிடுவதற்காக புறப்பட்ட சமயத்தில், தனது செல்போனை ‘சார்ஜ்’ போட்டபோது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பசவேஸ்வரா நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டபோது, சீனிவாஸ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.