Skip to content

ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற  மாணவ, மாணவிகளை அழைத்து  அவர்களுக்கு ஊக்கத்தொகை  வழங்கும் நிகழ்ச்சியை  இன்று நடிகர் விஜய் நடத்தி வருகிறார். சென்னை நீலாங்கரையில்  இந்த நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக, தொகுதிக்கு 3 பேர் மற்றும் அவர்களது பெற்றோரும் அழைத்து வரப்பட்டனர்.

பிளஸ்2 தேர்வில் சரித்திர சாதனையாக  600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்   நந்தினி என்ற மாணவி முதலாவதாக கவுரவிக்கப்பட்டார். அவருக்கு நடிகர் விஜய் பொன்னாடை போர்த்தி,  சான்றிதழ் வழங்கியதுடன் வைர நெக்லஸ் பரிசளித்தார். அடுத்தாக மாற்றுத்திறனாளி மாணவி கிணத்துக்கடவு  ஆர்த்திக்கு பரிசளித்து கவிரவித்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: முதலாவதாக எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.  எது முழுமையான கல்வி, நீங்கள் படிப்பது மட்டுமே முழுமையான கல்வி இல்லை  நாம் படித்தது எல்லாம் மறந்து விட்டாலும், அதன் பிறகு நம்மிடம் எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் கல்வி என்றார்  விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

நாம் படித்தது எல்லாம் மறந்து விட்டால் நம்மிடம் எஞ்சியிருப்பது ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான்.  இவற்றுக்கு முக்கியத்தும் கொடுங்கள். இது தான் கல்வி.

ஒருவன் பணத்தை இழந்தால்… அவன் ஒன்றையும் இழக்கவில்லை.  ஒருவன் ஆரோக்கியத்தை இழந்தால் … ஏதோ ஒன்றை இழக்கிறான். ஒருவன் ஒழுக்கத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுகிறான் என்பார்கள்.

இனி நீங்கள் பெற்றோரை விட்டு பிரிந்து கல்லூரி வாழ்க்கைக்கு செல்ல இருக்கிறீர்கள். வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்.  அதே நேரத்தில் நம் வாழ்க்கை நம்கையில் தான்.  சிந்திக்கும் திறன் நமக்கு வேண்டும். இப்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான பல தகவல்கள் வருகிறது.  அதில் எது உண்மை, எது பொய் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.  இதற்கு நீங்கள் பாடபுத்தகங்களை தாண்டியும் படிக்க வேண்டும்.

முடிந்தவரை பாடபுத்தகங்களை தாண்டி படியுங்கள், நமது தலைவர்களைப்பற்றி படியுங்கள்.  அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி  படியுங்கள், நல்லதை படிங்கள்.  உன் நண்பன் யார் என்று சொல்லு, உன்னைப்பற்றி நான் சொல்கிறேன் என்பார்கள். ஆனால் இப்போது அது மாறிவிட்டது. நீ எந்த சோசியல் மீடியாவை பார்க்கிறாய் என சொல்லு, நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்றாகிவிட்டது.

அடுத்ததாக நீங்கள்  முதன்முறையாக வாக்களிக்க போகிறீர்கள்.  நம் விரலைக்கொண்டே நம் கண்ணை குத்துகிறாார்கள்.  ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். குறைந்தபட்சம்  ஒன்றரை லட்சம் பேருக்கு கொடுத்தால் 15 கோடி ரூபாய் ஆகிறது.  15 கோடி ரூபாய் அவர் எப்படி சம்பாதிப்பார்?

காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என நீங்கள் உங்கள் பெற்றோரிடம்  சொல்லி பாருங்கள்.   நடக்கும்.இனி நீங்கள் பர்ஸ்ட் ஓட்டர்ஸ்.  நல்ல தலைவர்களை தேர்வு செய்யப்போகிறவர்கள்.இது எப்போது நடக்கிறதோ அப்போது தான் கல்வி முழுமை பெறும்.

அத்துடன் உங்கள் பகுதியில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இருப்பார்கள். நீங்கள் அவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த தேர்வில் அவர்களையும் வெற்றிபெற செய்யுங்கள். இது தான் நீங்கள் எனக்கு அளிக்கும் பரிசு.

எதையும் தைரியமாக செய்யுங்கள்,  தவறான முடிவு எடுக்காதீர்கள்.  உன்னால் முடியாது என  சொல்ல ஒரு கூட்டம் இருக்கும். உனக்குள் ஒருவன் இருப்பான். அவன் சொல்வதை செய்யுங்கள்.  வாழ்க கல்வி.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.  மதியம் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் அரசியலை  தொட்டு பேசியதால், அவர்  எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டே இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார் என  அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *