கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையைப் படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக, சந்திரயான்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனையடுத்து சந்திரயான்-3 ஆகஸ்ட் 5இல் சுற்றுவட்டப் பாதையில் நுழைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) ஆனது சுமார் 7 மணி நேரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேற்கண்ட முயற்சிகள் வெற்றி பெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 லேண்டரை தரையிறக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் இன்று இரவு 7 மணிக்கு நிலவு சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. இதனை சந்திரயான்-3 திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ட்வீட் மூலம் இஸ்ரோ இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ட்வீட்டில் “வணக்கம், இது சந்திரயான்-3. ஒரு சிறப்பு அப்டேட்டுடன் வந்துள்ளேன். இதுவரை எனக்கு இது ஒரு அற்புதமான பயணம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இன்று இரவு 7 மணிக்கு சந்திர சுற்றுப்பாதையில் நுழையப் போகிறேன். நான் எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிய, காத்திருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.