தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, ஆளும் பிஆர்எஸ்(பாரதிய ராஷ்டிரிய சமிதி) கட்சி 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வேட்பாளர்களுக்கு கட்சி சின்னத்துக்கான படிவத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து, பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது, “வறுமை கோட்டுக்குகீழ் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேசிஆர் காப்பீடு பெயரில் எல்ஐசி மூலம் ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மூத்த குடிமக்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 ஆண்டுகளில் ரூ.5,000 வரை உயர்த்தப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தகுதியான ஏழை பெண்களுக்கு ரூ.400 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். உயர் சாதி ஏழைகளுக்கு ஒரு தொகுதிக்கு ஒரு பள்ளி அமைக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, சித்திபேட் மாவட்டம் ஹூசனாபாத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.