சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரு நாட்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.