ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாய் புறப்பட்டுச் சென்றது. இந்தத் தொடரில் பிசிசிஐ-யின் புதிய பயண கொள்கை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் பயணம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன் துபாயில் இந்திய வீரர் கோலி தனியாக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டதற்கும் பிசிசிஐ தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இனி இதுபோல யாரும் வெளி உணவு சாப்பிடக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடர் சுமார் 3 வார காலத்தில் முடிவடைகிறது.
பாகிஸ்தானில் போட்டி நடக்கும் மைதானங்களில் இந்திய கொடி ஏற்றப்படவில்லை. மற்ற 7 நாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்பதால் அந்த நாட்டு கொடி ஏற்றப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து உள்ளது. பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் மட்டும் போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மோர்னே மார்கல், இவரது தந்தை நேற்று காலமாகிவிட்டதால் மார்கல் நேற்று அவசரமாக நாடு திரும்பி விட்டார். அவர் எப்போது திரும்புவார் என்று அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய அணி வரும் வியாழக்கிழமை முதல் போட்டியில் வங்கதேசத்துடன் மோத இருக்கிறது.