Skip to content

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.  , இந்திய நேரப்படி  இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான எதிரணி. நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே. கடைசி மூன்று போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதே போலவே அரை இறுதி ஆட்டத்திலும் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆட்டத்தின் நடுவே சில பதற்றமான சூழல்களும் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் போட்டிகள் அவ்வாறுதான் இருக்கின்றன. கண்டிப்பாக அழுத்தம் என்பது இரண்டு அணிகளுக்குமே இருக்கும்

ஒரு அணியாக, ஒரு வீரராக, பேட்டிங் குழுவாக, பந்து வீச்சு குழுவாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். இது எங்களுக்கு அதிகம் உதவியாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி பல ஆண்டுகளாக சிறந்து விளங்குகிறது. இதனால் அவர்கள் போராடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொரு முறையும், ஆடுகளம் வெவ்வேறு சவால்களைக் கொடுக்கிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும், ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது.  துபாய் மைதானம்  எங்கள் சொந்த மண் மைதானம் இல்லை,  நாங்கள் இங்கு அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை, இது எங்களுக்கும் புதிதுதான். இங்கு நான்கைந்து ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரையிறுதியில் எந்த ஆடுகளத்தில் விளையாட போகிறோம் என்பது தெரியாது.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசும்போது, கொஞ்சம் ஸ்விங் இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது நாங்கள் அதைப் பார்க்கவில்லை. 2-வது ஆட்டத்தில் பந்துகள் அதிகம் சுழலவில்லை. ஆனால் கடைசி ஆட்டத்தில் பந்துகள் கொஞ்சம் திரும்பின. ஒவ்வொரு ஆடுகளத்திலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எனவே, இந்த ஆடுகளத்தில் என்ன நடக்கும், எது நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் உதவியாக இருந்தால் போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

இங்குள்ள ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதை இரு மாதங்களாக இங்கு நடைபெற்ற போட்டிகளின் வாயிலாக அறிந்தோம். இதன் அடிப்படையிலேயே அணியை தேர்வு செய்தோம். மெதுவாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் உதவியாக இருப்பார்கள். 5 முதல் 6 நாட்களுக்கு முன்னரே துபாய் வந்து பயிற்சிகள் மேற்கொண்டதும் இங்குள்ள சூழ்நிலையை தகவமைத்துக் கொள்ள உதவியது. இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

 

 

error: Content is protected !!