அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கீழப்பட்டி தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தில் செல்வம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு மருதூர் தெற்குப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது மோட்டார் பைக்கில் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். உஷாரான ஆசிரியை அவர்களிடம் இருந்து விலகிக் கொண்டார். இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் தங்களது மோட்டார் பைக்கில், இந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால் பைக்கில் வந்த இருவரும் அந்த இடத்திலிருந்து அதிவேகமாக தப்பித்து ஓடினர் . விடாமல் துரத்தி சென்று 15 கிமீ தூரத்தில் செந்துறை அண்ணா நகர் அருகில் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இருவரிடம் போலீசார் நடத்தினர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம் சௌந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன்
சரவணன் (29), விழுப்புரம் மாவட்டம் ஆயத்துர் புதுமனை தெருவைச் சேர்ந்த இசையாஸ் மகன் ஆமோஸ் பெர்னாண்டஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் திண்டுக்கல், விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த செந்துறை போலீசார், அவர்களிடம் இருந்த கத்தி மற்றும் மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். இருவரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு ஜாமின் வழங்காமல், வழக்கு விசாரணை செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெபகிருபா, குற்றவாளிகள் சரவணன்,
ஆமோஸ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதனைத் செந்துறை போலீசார் 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வழக்கு தொடர்ந்து 50 நாட்களுக்குள் தொடர்ந்து விசாரணை நடத்தி உடனடியாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.