தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் பிரகாசம் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
. வீட்டிற்குள் புகுந்த அந்த மர்ம நபர் கத்தியுடன் அறைக்குள் நுழைந்து சரஸ்வதியை மிரட்டி தாலிச் செயினை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட சரஸ்வதி முகமூடி அணிந்த வாலிபரை பிடித்து தள்ளிவிட்டு அலறிக்கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார்.
சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே முகமூடி அணிந்த வாலிபரைக் கண்டு மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கிழக்கு போலீசார் அந்த வாலிபரின் முகமூடியை எடுத்துப் பார்த்தபோது அவர் பிரகாசத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (29) என்பது தெரியவந்தது.
.
இது குறித்து சரஸ்வதி கிழக்கு போலீசில் புகார் செய்தார் இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.