‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்ட அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.
இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்கட்ட நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார். மத்திய அரசும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடியை வழங்குவதாக அறிவித்தது. இந்த நிலையில், புயல் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது.
இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய குழுவினர் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்கள். பின்னா் முதல்வரை சந்தித்து பேசுகிறார்கள். அதன் பிறகு டில்லி திரும்பும் மத்திய குழுவினர் வெள்ள சேதம் குறித்த அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் தாக்கல் செய்கிறாா்கள்.