காவிரி டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்ததாலும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளது.
அரசின் இந்த கோரிக்கையை தொடர்ந்து நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய மத்திய அரசு அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகிறது. மத்திய உணவுத்துறை கீழுள்ள சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் 2 உதவி இயக்குநர்கள், 2 அலுவலர்கள் தமிழகம் வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை ஆய்வு செய்து மத்திய அரசின் உணவு அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்க குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.