மிக்ஜம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த பாதிப்புகளை பார்வையிட 6 உயர் அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு டெல்லியில் இருந்து நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவினர் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் மத்திய குழுவினர் 2-ஆக பிரிந்து, ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வின்போது மத்திய குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
ஆய்வுக்கு இடையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய குழுவின் தலைமை அதிகாரி கூறியதாவது: 2015-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம்; பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள். 3 நாட்கள் களப் பார்வைக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பிப்போம். மிக்ஜம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிக சிறப்பாக கையாண்டுள்ளது. மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.