பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, ‘தமிழகத்தில் பயற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்’ என்றார். அவருக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு வந்த போது, ‘பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே தாக்கல் செய்த மனுவில், ‛‛ தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ”, எனத் தெரிவித்து உள்ளது.