தமிழ்நாட்டின் மத்திய பகுதி திருச்சி. இங்குள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு பகல் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்திய பஸ் நிலையம் வந்து செல்கிறார்கள்.
இவர்களுக்காக மத்திய பஸ் நிலையத்தில் பல இடங்களில் கட்டண கழிப்பறைகள் செயல்படுகிறது. மாநகராட்சி பஸ் நிலையமாக இருந்தபோதிலும், கட்டண கழிப்பறைகள் குத்தகைக்கு விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இதில் பஸ் நிலையத்தின் மேற்கில், அதாவது பாளையம், முசிறி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்காலின் மேற்புற மூடிகள் அனைத்தும் உடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாளையம், நாமக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பயணிகளுக்கு தொற்று நோற் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அந்த பகுதியில் ஈக்கள், கொசுக்கள் மொய்க்கின்றன. இதன் மூலம் பஸ் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடனடியாக அந்த கழிவறையை சீர்படுத்துவதுடன் வெளிப்புறத்தில் திறந்த நிலையில் கிடக்கும், கழிவு நீர் வாய்க்கால்களை புதிய மூடிகள் போட்டு மூடி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.