செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ரெயில் நிலையத்தில் நடந்தது. இதில் புதிய செயலி குறித்த துண்டு பிரசுரமும் பயணிகளிடம் வழங்கப்பட்டது. இதை பயணிகள் ஆர்வமுடம் வாங்கி சென்றனர்.
ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறலாம். ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் மையங்களிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து டிக்கெட் பெறலாம். இதே போன்று முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கும், சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் பெறுவதற்கும் செல்ோன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் இந்த செயலி மூலம் டிக்கெட் பெறுவதை விட ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் மையம், தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலமே அதிகஅளவு பெற்று வந்தனர். இதனால் சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் நீண்ட வரிசையும் காணப்படும்.
இந்த நிலையில் இந்த செயலி குறித்து தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரெயில் நிலைய மேலாளர் ரிச்சர்டு உல்ரிச்டு, வணிகப்பிரிவு உதவி மேலாளர் ஜான்டேனியல் தேவஅன்பு, வணிக ஆய்வாளர் அகிலன், வணிக மேற்பார்வையாளர் தங்கமோகன் ஆகியோர் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். மேலும் செயலி தொடர்பான விழிப்புணர்வு நோட்டீசுகளையும் ரெயில் நிலைய பகுதிகளில் ஒட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் திருமேனி, நிர்வாகி முகமதுபைசல், தஞ்சை ரெயில் நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் முரளிதரன், ரஜினிகணேசன், முத்துராமலிங்கம், ரகுபதி மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
பின்னர் ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்த செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் பெறலாம். ரெயில் நிலையத்துக்கு வந்து வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்க்கும் வகையில், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே டிக்கெட்டுகளை செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை ரெயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் ஒரு மாதம், 6 மாதம், 1 ஆண்டு வரையிலான சீசன் டிக்கெட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். தண்டவாளத்தில் இருந்து 25 மீட்டர் தொலைவுக்கு அப்பால் டிக்கெட் பெறலாம். ரெயில் நிலையத்தில் உள்ள கியூ ஆர் கோர்டை பயன்படுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.