வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று மாலை கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் கருவிழந்தநாதபுரம் அருகே ஆக்கூர் முக்கூட்டு செல்லும் சாலை ஓரம் நேற்று அதிகாலை தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இவர்களது பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஒரு நபர் திருடும்போது, விழித்துக்கொண்ட பாதயாத்திரை குழுவினர். அந்த நபரை விரட்டி பிடித்தனர்.
அவரிடம் இருந்து செல்போன், பவர்பேங்கை திரும்ப பெற்றதோடு அந்த நபரை அனைவரும் தாக்கினர். அப்போது அவர்ளில் ஒருவர் அவசர போலீசுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். பின்னா் செல்போன் திருடிவயரை அங்கேயே விட்டு விட்டு பாதயாத்திரை தொடங்கினர். சிறிது நேரம் கழித்து போலீசார் அங்கு வந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் மயக்க நிலையில் கிடந்தார். அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அடிபட்டவர் மேலப்பெரும்பள்ளம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் இளங்கோவன்(35) என்று கூறியதோடு தன்னை வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற ஆறு பேர் சேர்ந்து தாக்கினர் என்று சொல்லிவிட்டு மீண்டும் மயக்கமடைந்தார்.
சிறிது நேரத்தில் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். செம்பனார்கோவில் போலீசார் மர்மசாவாக வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இளங்கோவன் இறந்ததை சொல்லாமல் போலீஸ் எண் 100க்கு அழைத்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்று விசாரணை செய்தபோது அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (18), பொன்னிவளவன்(19) பாலசுப்ரமணியம்(21) தினேஷ்கரன்(20) சுகுமார்(19) மற்றும் தென்னாம்பாக்கம் முத்துகமலேஷ்(20) ஆகிய ஆறு பேரையும் கைது செய்து செம்பனார்கோவில் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.
வழக்கை 304(2) (கொலை செய்ய உள்நோக்கம் இல்லாமல் நடத்தப்பட்ட தாக்குதலினால் மரணமடைதல்) என்று வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இறந்த இளங்கோவனுக்கு கௌசல்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக சென்ற இளைஞர்கள் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.