சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர், தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். கனி வேலைக்குச் சென்ற பின்பு அவருடைய மனைவி வீட்டு பாத்ரூமில் குளிக்கச் சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அந்தப் பெண் குளிப்பதை ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வாலிபரைப் பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் அதே வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் ஸ்ரீராம் (22) என்பதும், கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. ஸ்ரீராமின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, ஸ்ரீராமின் சொந்தத் தாயார் உட்பட பல பெண்கள் குளிக்கும் வீடியோ இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஸ்ரீராம் தனது அலுவலகம் மற்றும் வீட்டருகே உள்ள பெண்கள் குளிப்பதையெல்லாம் செல்போனில் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீராமை போலீஸார் கைது செய்து சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்ரீராம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சில வருடங்களாக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஸ்ரீராமின் வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் முன்பு சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்ட ஸ்ரீராமை எச்சரித்து ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.