Skip to content

அமரன் படத்தில் செல்போன் காட்சி நீக்கம்….ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படம் அமரன். இந்த படத்தில், சாய்பல்லவியின் மொபைல் எண் தன்னுடயைது என கூறி சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தொலைபேசி எண்ணிற்கு தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனால், தன்னால் படிக்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் தான் காரணம். இதுகுறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்த தவறை அவர்கள் திருத்தவில்லை. இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுவதால் ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும். படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு, தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். இதையடுத்து நீதிபதி ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது என கூறியதோடு மனுவிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!