தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பாரதிதாசன் (24). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ரயில் வருவதற்கு முன்பு ரயில் நிலையம் அருகே ஒரு மறைவான பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 2 வாலிபர்கள் திடீரென பாரதிதாசனை வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிதாசன் சம்பவம் குறித்து கும்பகோணம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல், எஸ்ஐ சிவராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கும்பகோணம் கஸ்தூரிபாய் ரோடு பகுதியை சேர்ந்தவர்களான விவேகானந்தன் (24) மற்றும் செந்தில் மகன் கார்த்தி (28) ஆகிய இருவரும் சேர்ந்து பாரதிதாசனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், கடந்த இரண்டு வருடங்களாக அப்பகுதியில் தொடர் வழிப்பறியில் அவர்கள் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்து கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட் எண் 2ல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் குற்றவாளிகள் விவேகானந்தன், கார்த்தி ஆகியோருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.