உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்பது போல , உலகிலேயே அதிகமாக செல்போன் உபயோகிக்கும் நாடும் இந்தியா தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிக்கு செல்வோர் முதல் முதியோர் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் அழுதால் அழுகையை நிறுத்த பெற்றோர்கள் செல்போன்களைத்தான் கையில் கொடுக்கிறார்கள்.
இந்த செல்போன்கள் பயன்பாட்டுக்கு ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப ரீ சார்ஜ் செய்து கொள்கிறார்கள். குறைந்தபட்சம் 10 ரூபாயில் இருந்து அவரவர்களின் தேவை, வசதிக்கு ஏற்ப ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். மக்களின் செல்போன் மோகத்தை தெரிந்து கொண்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு ரீ சார்ஜ் கட்டணங்களை உயர்த்துகிறார்கள்.
தற்போது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம். 5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு வரும் ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது, இந்த ரீசார்ஜ் கட்டணம் சுமார் 22% உயர்கிறது. ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள். தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 239 ஆக இருந்த தினசரி 1.5 ஜிபி நெட் பேக் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 299 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 299 ஆக இருந்த தினசரி 2 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 349 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.
இதுபோல ஏர்டெல் நிறுவனமும் ரீ சார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ரூ.179 கட்டணத்தை தற்போது 199 ஆக உயர்த்தி உள்ளது.