நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே கடந்த 13, ம் தேதி கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த கடையில் 14, விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போயின. இது குறித்த புகாரின் பேரில் களத்தில் இறங்கிய நாகை தனிப்படை போலீசார் திருடன் குறித்து கடையில் பதிவான கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, அதில் செல்போன் கடை ஷட்டரின பூட்டை கட்டர் இயந்திரத்தால் உடைத்து, விலை உயர்ந்த செல்போன்களை திருடி செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், கடையில் திருடப்பட்ட 2, லட்ச ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்களை அந்த ஆசாமி தஞ்சையில் உள்ள சில கடைகளில் குறைந்த விலைக்கு விற்றுள்ளான். திருடனிடம் இருந்து செல்போனை வாங்கிய அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதில் சிம் கார்டு செலுத்தவே களவு போன செல்லின் IMEI நம்பர் ஆக்டிவேட் ஆகி உள்ளது. இது குறித்த நாகை சைபர் கிரைம் போலீசாருக்கு குறுந்தகவல் வரவே, தஞ்சைக்கு சென்ற தனிப்படைபோலீசார், அங்கு
பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த மானாம்பூசாவடியைச் சேர்ந்த குமரேசன் என்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து தஞ்சையில் விற்கப்பட்ட செல்போன்கள் அனைத்தையும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நாகைக்கு அள்ளி வந்த திருடனை, தனிப்படை போலீசார் அவர்கள் பாணியில் கவனிக்கவே, செல்போன் திருடன் குமரேசன் அளித்த தகவல் போலீசாரையே ஒரு கணம் கிறுகிறுக்க வைத்துள்ளது.
youtube பார்க்கும் பழக்கம் உடைய குமரேசன், திருட்டு சம்பவம் குறித்த வீடியோக்களை அதிகம் பார்த்துள்ளதும், கொள்ளையடிக்க தேவையான இயந்திரங்களை எங்கு வாங்குவதும் என்பது குறித்தும் அலசி ஆராய்ந்துள்ளான்.
பின்னர் பூட்டை உடைக்கும் கட்டர் இயந்திரத்தை அமேசானில் ஆர்டர் செய்த குமரேசன், அது தன் கைக்கு கிடைத்ததும் வேலையை காட்ட ஆயத்தமாகி உள்ளான். அப்படித்தான் நாகைக்கு சம்பவம் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன் வந்து செல்போன் கடையை நோட்டமிட்ட குமரேசன் கடந்த 13,ஆம் தேதி இரவு கடையில் இருந்த பூட்டையும், ஷட்டரையும் கட்டர் இயந்திரம் கொண்டு உடைத்து உள்ளே இருந்த விலை உயர்ந்த செல்போன்களை மட்டும் களவாடி அங்கிருந்து தஞ்சைக்கு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சுவாரஸ்ய சம்பவங்களை எல்லாம் செல்போன் திருடனிடமிருந்து கேட்டு தலை கிறுத்த நாகை தனிப்படை போலீசார், நல்ல விஷயங்களுக்கு youtube பக்கம் செல்வதை தாண்டி, கெட்ட விஷயங்களுக்காக இளைஞர்கள் பலர் யூடூப் வலைதளத்தில் நாடி சென்று வாழ்க்கையை தொலைத்து சிறையில் கம்பி எண்ணுவது என்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தும் விதமாக இந்த சம்பவம் காண்பிக்கிறது.
பல லட்சம் ரூபாய் முதலீடுகளை போட்டு வியாபாரம் செய்யும் வணிகர்கள் தங்களது பொருட்கள் களவு போகாமல் காக்க, திண்டுக்கல் பூட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்தாலும், திருட்டுக்கு நான் சளைத்தவன் அல்ல! என்பது போல் அட்வான்ஸ் ஆக சிந்தித்து ஷட்டர் இன் பூட்டை உடைக்க அமேசானில் கட்டர் ஆர்டர் செய்து அசால்டாக செல்போன்களை ஆட்டையை போட்டு அள்ளிச்செல்லும் இது போன்ற சம்பவங்கள் வணிகர்கள் மத்தியில் பயத்தையும், கவலையையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது.