இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 45 ஆயிரம் பேர் பலியானார்கள். அங்குள்ள வீடுகள் கட்டிடங்கள் தரைமட்டமானது. சுமார் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலை தாக்கியதால், இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில் லெபனானில் சுமார் 3800 பேர் பலியானார்கள். இந்த போர் 3ம் உலகப்போரை ஏற்படுத்தி விடுமோ என்று உலகமே அஞ்சியது.
இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு உள்ளார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது. எனவே போர் ஓயும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறும்போது, அமெரிக்காவின் முழு புரிதலோடு, நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம். ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம். எல்லையருகே பயங்கரவாத கட்டமைப்பை எழுப்ப முயன்றால், நாங்கள் தாக்குவோம். ஒரு ராக்கெட்டை ஏவினாலும், சுரங்கம் ஒன்றை தோண்டினாலும், ராக்கெட்டுகளை சுமந்தபடி லாரியை கொண்டு வருகிறது என்றாலும் நாங்கள் தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.