கரூர் அடுத்த வடக்குபாளையம் அருகே அமைந்துள்ள குமரன் பார்க் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்த பகுதியில் மின் விளக்குகள் குறைவாக உள்ளதால், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி கேமராவை பாதுகாப்புக்காக வைத்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் இல்லாத நேரமாக நேற்று இரவு சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசியை காட்டியுள்ளனர்.
இதில் ஹரிஹரசுதன் என்பவர் வீட்டில் 11 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி, 1 லட்ச ரூபாய் ரொக்கமும், சுரேஷ் என்பவர் வீட்டில் 8 பவுன் தங்க நகை மற்றும் பானுமதி என்பவர் வீட்டில் 15,000 ரூபாய் ரொக்கம் என மொத்தம் 19 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி, 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு அடுத்தடுத்து 3 வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதே பகுதியில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த 2 இளைஞர்களில் ஒருவரை ஊர் பொதுமக்களே போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.