சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு கண் தெரியவில்லை நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். இதைப்பற்றி பேச சட்டசபையில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ. ஆனதில் அர்த்தம் இல்லை. அந்த அடிப்படையில் தான் கள்ளக்குறிச்சி மரணம் குறித்து பேச அனுமதி கேட்டேன். அனுமதி கொடுக்கவில்லை. ஏழை, எளிய, ஆதிதிராவிட மக்கள் இறந்து இருக்கிறார்கள். இதை பேசத்தான் அனுமதி கேட்டோம். ஆனால் சபாநாயகர் வெளியேற்றி விட்டார். சபாநாயகர் நடுநிலையோடு நடந்திருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 50 பேர் இறந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித்தலைவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரை குண்டுகட்டாக வெளியேற்றினர். இது கண்டிக்கத்தக்கது. எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர். எங்களை கைது செய்யும் போக்கு கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். மக்களின் நலன் கருதி பேச நினைத்தோம். எங்களை அடக்கி ஒடுக்க நினைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கள்ளச்சாராய மரணம் யாராலும் ஏற்கமுடியாது. போலீஸ் நிலையம் அருகில், கோர்ட் அருகிலேயே சாராயம் விற்று உள்ளனர். 3 ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் விற்கிறார்கள். இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு தேவையான மருந்து அங்கு இல்லை. ஆனால் அமைச்சர் எல்லா மருந்துகளும் இருப்பதாக பொய் சொல்கிறார். சிகிச்சை முறைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை. உண்மையான செய்தியை கலெக்டர் வெளியிட்டிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். அழுத்தத்தின் பேரிலேயே கலெக்டர் அப்படி கூறியிருக்கிறார். இவ்வளவு உயிர் போனதற்கு காரணம் இந்த அரசாங்கம். எனவே ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் சிலர் சாராய விற்பனைக்கு துணையாக இருந்துள்ளனர். சாராயம் விற்ற இடத்தில் ஆளுங்கட்சி போட்டோ ஒட்டப்பட்டுள்ளது. அப்படியானால் ஆளுங்கட்சி இதற்கு உடந்தையாக இருந்துள்ளது. இதை எல்லாம் கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. சிபிஐ விசாரணைக்கு அரச உத்தரவிடவேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிக்கு போனில் தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் நேரில் புகார் செய்துள்ளார்.