பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோவையில் உள்ள அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது. தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக சேகர் கூறியிருந்த நிலையில் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில் 5 போலீசார் இன்று திடீரென கோவையில் உள்ள சேகர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த சேகர் கூறியதாவது:
தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக கூறிய நிலையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனாலும் நாங்கள் அவர்களை அழைத்து விசாரணைக்கு ஒத்துழைத்தோம். மடியில் கனமில்லை. எனவே வழியில் பயமில்லை. எனவே விசாரணையை எதிர்கொள்வோம்.எங்களுக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தம் இல்லை. தமிழக அரசின் அழுத்தத்தால் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.