புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக நேற்று திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று இறையூர், வேங்கைவயல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஊராட்சித்தலைவர் முத்தையா, மற்றும் பயிற்சி போலீஸ்காரர் முரளி, ராஜா உள்பட 8 பேரை சம்மன் அளித்து திருச்சி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இரண்டாவதுநாளாக இன்றும் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது.. சம்பவ இடத்திற்கு சென்ற தொடர்புடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் சந்தேகம் மற்றும் விபரங்கள் தெரிய வாய்ப்பு உள்ளது என்பதன் அடிப்படையில் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்கின்றனர். அதே சமயம் புதுக்கோட்டை போலீசார் தரப்பில் இந்த விவகாரத்தை பொருத்தவரை குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் இல்லை.. சிபிசிஐடி போலீசாரும் பெரும் சங்கடத்தில் உள்ளனர் என்பது தான் உண்மை என்கின்றனர்..