திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மகள் ரிஸானா தஸ்ரின்( 6). நேற்று சதாம் உசேன் தனது குடும்பத்துடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றார். அங்கு காவிரி ஆற்றின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் அவர்கள் குளித்தனர். அவர்களுடன் ரிஸானா தஸ்ரினும் குளித்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சதாம் உசேன், தனது மகளை பார்த்தபோது அவளை காணவில்லை. இதனால் பதறிப்போன சதாம் உசேன் தண்ணீரில் தேடினார். அப்போது ரிஸானா தஸ்ரின் தண்ணீரில் மூழ்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், ரிஸானா தஸ்ரின் இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிஸானா தஸ்ரினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு ரிஸானா தஸ்ரினின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவளது உடலை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அரசு மருத்துவமனை போலீசார் ரிஸானா தஸ்ரினின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்த உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.