காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வது கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதற்கு தமிழக அரசின் சார்பில், ‘‘இந்தஆண்டில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் முறையாக வந்துகொண்டிருக்கிறது. அங்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதால் 110 டிஎம்சி நீர் அணைகளில் இருப்பு உள்ளது. அதிக மழைப்பொழிவின் காரணமாக அணைகளுக்கு கிடைத்த உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீரை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு செப்டம்பரில் வழங்க வேண்டிய 36.7 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
நிறைவாக, ஆணையத்தின் தலைவர்எஸ்.கே.ஹல்தர் பேசும்போது, ‘‘கடந்த 2 மாதமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் இல்லை. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிப்பது குறித்து 2 மாநில அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கூட்டம் முடிந்ததும் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் கூறும்போது, வெள்ளக்காலங்களில் கர்நாடகா அணைகளின் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் உபரிநீரை கணக்கில் கொள்ளக்கூடாது. இதனால் தான் உச்சநீதிமன்றம் மாதா மாதம் எவ்வளவு நீர் திறக்கவேண்டும் என மாதவாரியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கர்நாடக அரசு நீர் திறக்கவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினோம். அதன்படி செப்டம்பரில் 36.7 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்’ என்றார்.