தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
மைசூருவில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில், காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு திங்கட்கிழமை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,998 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 5,268 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 11,998 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.