காவிரியில் உரிமை கோரி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் , காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை வகித்து பேசியதாவது:
நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தாலும் அதை அமல்படுத்தவில்லையே. போராடி பெற்றது தான் காவிரி நீர் மேலாணமை ஆணையம். காவிரிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்த வேண்டும். நீதிமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை தாண்டியதுதான் மக்கள் மன்றம். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. எதிர்கட்சி தலைவராக உள்ள காங்கிரஸ் ராகுல் காந்தியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் என்பது வரவு செலவுதிட்டம். தற்போது இதை ஒன்றிய மைனாரிட்டி அரசு இதை அரசியல் ஆயுதமாக மாற்றி உள்ளது. நமக்கு நீர் பிரச்சினையும் முக்கியம். நிதி பிரச்சினையும் முக்கியம். நாங்கள் பிரிவினையை கேட்கவில்லை. தமிழ்நாட்டின் வரிப்பணத்தை நீங்கள் மற்றவர்களுக்கு வாரி கொடுக்கிறீர்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், நான் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நன்மை செய்வேன் என்றார்.அதுதான் இந்த அணியினுடைய வெற்றி. இளைஞர்களே நீங்கள் தமிழ்நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள். கலைஞர் ஒரு அற்புதமான வாசகத்தை தந்தை பெரியார் வழியிலே கூறியுள்ளார். உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று. அந்த உரிமை நீர் உரிமையாக இருக்கலாம். நிதி உரிமையாக இருக்கலாம் வேறு உரிமையாக இருக்கலாம். எந்த உரிமையாக இருந்தாலும் அந்த உரிமைக்காக கட்சி இல்லை, மதம் இல்லை. அனைவரும் ஒன்று சேர்வோம். போராடுவோம். வெற்றி பெறுவோம். தயாராகுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தஞ்சை மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவையாறு எம்எல்ஏவும் திமுக மத்திய மாவட்ட செயலாளருமான துரை சந்திரசேகரன், தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், எம்எல்ஏ அன்பழகன், காங்கிரஸ் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மா கம்யூ., மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். திராவிடர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார்.