திருச்சி மாநகரம்- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ல் காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக 4 சக்கர வாகனங்கள் தினமும் 10 ஆயிரம் முறை செல்கிறது. டூவீலர்கள் லட்ச கணக்கில் செல்கிறது. திருச்சி மாநகரின் போக்குவரத்திற்கு இந்த காவிரி மூலம் தான் இதயமாக செயல்படுகிறது. வாகன போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக அந்தப் பாலம் பழுதடைந்தது. எனவே அதனை சீரமைக்க அரசு ரூ. 6.87 கோடி ஒதுக்கியது.
சீரமைப்பு பணி கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பாலம் முற்றிலுமாக மூடப்பட்டு போக்குவரத்து சென்னை பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலைஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த பழைய பாலமானது 1754 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு கடந்த 1929 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு 1976 வரை பயன்பாட்டில் இருந்து வந்தது.அந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் அதுவும் மூடப்பட்டது.
இந்த நிலையில் அந்த பழைய பாலத்தை மீண்டும் திறந்து சீரமைத்து இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த பாலத்தை திறப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்தப் பாலத்தின் ஒருபுறத்தில் திருவரம்பூருக்கு செல்லும் குடிநீர் குழாயும், மற்றொருபுறம் கழிவுநீர் குழாயும்
செல்வதால் இரண்டு மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது.எனவே ஒருவழிப்பாதையாக மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.