மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் கடிதம் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: காவிரி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் வழங்கினேன். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
நதிநீர் பங்கிட்டு வழங்குவதில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதா மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை. கர்நாடகா அரசு கடந்த 17ம் தேதி வரை தமிழகத்திற்கு தர வேண்டிய நீரில் 22.54 டிஎம்சி தண்ணீர் நிலுவை உள்ளது. காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது. மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது, ஒருபோதும் கட்ட விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.