Skip to content

காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Authour

கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முழு அடைப்பு காரணமாக பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள்  மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் சுமார் 500 பேருந்துகள், ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் சோதனை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றன. நீலகிரி தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் 3-வது முறையாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  ஆங்காங்கே  கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு பாஜக,  மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!