மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 67.91 அடி. அணைக்கு வினாடிக்கு 165 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10ஆயிரத்து மூன்று கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் 30.932 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 104 கனஅடியும், வெபண்ணாற்றில் 6,054 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,361 கனஅடியும், கொள்ளிடத்தில் 808 கனஅடியும் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 120.24 அடி.
மேட்டூர் அணை இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இன்று 67.91 அடியாக உள்ளது. இந்த நிலையில் தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அரசு கடந்த மாதம் 9.19 டிஎம்சி, இந்த மாதம் 31.24 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும். ஆனால் நேற்று வரை கர்நாடகம் 5 டிஎம்சி தண்ணீர் அளவுக்கே தந்து உள்ளது. எனவே தமிழக அரசு காவிரி நீரை விடுவிக்க கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த நிலையில் கர்நாடகத்திற்கான நீர் பிடிப்பு பகுதிகளில் இப்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் கே. ஆர். எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதுபோல கேரளத்தில் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்வதால் கபினி அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் கபினியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுபோல கே. ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. கே. ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 20,749 கனஅடி தண்ணீர் வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,250கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும். எனவே நாளை முதல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சிறிதளவு உயரத்தொடங்கும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர் வராது. குறுவை சாகுபடி பாதிக்கும். அதை வைத்து அ ரசியல் செய்யலாம் என காத்திருந்த அரசியல்கட்சிகள், விவசாய சங்கத்தினருக்கு இது அதிர்ச்சியாக அமைந்து விட்டது. இன்னும் ஒருவாரம் வயநாட்டிலும், குடகு பகுதியிலும் மழை கனமாகபெய்தால் மேட்டூருக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே குறுவை பயிருக்கு போதுமான தண்ணீர் கிடைத்து விடும் என இப்போது நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.