மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை….. கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட மறுத்ததால் காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு, மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை கதவடைப்பு போராட்டத்தை பிஜேபி மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தியுள்ளன. காவிரி படுகை மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி துவங்கிடவும் உடன் காவிரியில் மாத வாரியாக வழங்கிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்களில் நடைபெறவுள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் முழு வெற்றியடைய மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கின்றது இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.