திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில், திருச்சி காவிரி பாலமும் ஒன்று. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் பிரம்மானந்தா ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலம் திருச்சி மக்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் பல்லாயிரகணக்கலான வாகனங்களும், பல லட்சம் மக்களும் இந்தப் பாலத்தை பயன்படுத்துகிறார்கள்.
மலைக்கோட்டையில் இருந்து இந்த பாலத்தையும், காவிரியையும் பார்ப்பதே கொள்ளை அழகு. மாலை நேரங்களில் இந்த பாலம் திருச்சி மக்களின் பொழுதுபோக்கு பூங்காவாகவும் திகழ்கிறது. குழந்தை குட்டிகளுடன் பாலத்தின் நடைபாதையில் நின்று மக்கள் சிறிது நேரம் காவிரி காற்றை வாங்கி மகிழ்வார்கள்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் நாள்பட்டதன் காரணமாக பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டது. இதனால்2015, 2018 ஆகிய ஆண்டுகளில் ஓரளவு பழுதுபார்க்கப்பட்டது. கடந்த ஆண்டும் இந்த பாலத்தில் அதிக வைப்ரேஷன் ஏற்பட்டு ஆங்காங்கே கீறல்கள் ஏற்பட்டதால் அதனை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
அதைத்தொடர்ந்து ரூ.6.87 கோடி செலவில் பாலத்தை சீரமைப்பது என திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு 10.9.22 முதல் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானதால் டூவீலர்கள் மற்றும் பாதசாரிகள் மற்றும் பாலத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
20.11.22 முதல் டூவீலர்கள், பாதசாரிகள் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடந்து வந்தது. இதனால் திருச்சியில் இருந்து காவிரி பாலத்தின் வழியாக செல்பவர்கள் பைபாஸ் வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. சுமார் 5 மாதங்கள் இந்த நிலை நீடித்தது.
பாலப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் நேருவிடம் திருச்சி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அமைச்சர் நேரு பாலப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதனால் பணிகள் இரவு பகலாக நடந்து வந்தது. தற்போது பாலத்தின் பக்கவாட்டு கைப்பிடி சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் பணியும், தார் சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
நாளைக்குள் இந்த பணி முடிந்து விடும் நிலையில் உள்ளது. காவிரி பாலம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் நேருவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர், 1ம் தேதி முதல் 3ம் தேதிக்குள் பாலம் திறக்கப்பட்டு விடும் என்றார். அதன்படி பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. பழைய பாலம் போல அல்ல, கலர்புல் காவிரி பாலமாக இனி பார்க்கலாம். ஓரிருநாளில் பாலம் திறக்கப்படும் நிலையில் உள்ளது.