தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விட வேண்டும். அதன்படி, காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது.
அணைகளில் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதை காரணம் காட்டி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் கர்நாடகா இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட தண்ணீர் தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆகஸ்ட் 12 முதல் 26ம் தேதி வரை 1.49 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிப்பு. டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.