கரூர் ஊராட்சி ஒன்றியம் கோம்புபாளையம் ஊராட்சியில் கோம்பு பாளையம், முனி நாதபுரம், முத்தனூர் பெரியார் நகர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ ஏற்று, தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசின் சிறு கனிம வளத்துறை நிதி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன
தன்பங்களிப்பு மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கோம்புபாளையம் காவிரி ஆற்றில் இருந்து புதிய கிணறு அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்த பணிகள் முடிவற்ற நிலையில் தற்போது, காவிரி ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் செல்கிறது. இதனையடுத்து கோம்புபாளையம் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் விநியோகம் வழங்கப்பட உள்ளன இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்லும் நிலையில் ஆழமான பகுதிகளை கடந்து அவர் பரிசல் பயணம் செய்து ஆய்வு நடத்தியது கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நெடுங்கூர் கார்த்திக், கரூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வளர்மதி சிதம்பரம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.